(60) கமலின் ரிஸ்க்கும் -ரஜினியின் ஸ்டைலும்!
ரஜினி எதனால் தமிழ்த்திரையுலகின் திருப்புமுனை என நான் சொல்கிறே னென்றால், இயக்குநர் சிகரம் அரங்கேற்றத்திலிருந்து கமலை பல படங்களில் நடிக்கவைத்து, அவரை உச்சத்தில் அமரவைக்க முயன்றார். மேலும், தன் திறமைகளைக் கொட்டி, உலக சினிமாவைப் படித்து, முட்டி மோதிவந்த போதிலும் மக்கள் "சின்ன சாம்பார்' என அழைத்தார்களே தவிர, போற்றிக் கொண்டாடவில்லை. அதை பிரபல வக்கீல் பி.பி.ஆர். அவர்கள் இப்படி வேடிக்கையாகச் சொல்லியுள்ளார்.
"இந்து மதத்தில் அனைத்தும் அர்த்தமுள்ளதே! புரிந்துகொண்டால் கண்ணதாசன்... புரியாவிட்டால் கமல்ஹாசன்'.
கலையுலகில் கமலை வேடிக்கை பார்த்தார்கள். ஒரு "சகலகலா வல்லவன்', "நாயகன்', தேவர் மகன்' போன்ற படங்கள் வந்த பின்னர்தான் அவர் நடிப்பை வியந்து பார்க்க ஆரம்பித்தனர்.
ரஜினி அப்படி அல்ல... "அபூர்வ ராக'ங்களில் "கேட்'டை திறந்து, தாடி மீசையுடன் ஒழுங்கற்ற ஆடைகளுடன், எங்கோ சொருவி நின்ற கண்களின் கூரிய பார்வையுடன் நின்றபோதே, "யாரிந்த ஆளு? வித்தியாசமா தெரிகிறாரே!' என பலர் பேசியது என் காதுகளிலும் விழுந்தது. கமல் பாத்திரமாகவே மாறிவிட ஏதேதோ செய்வர். ரஜினி தன் ஸ்டைலுக்கு கதாபாத்திரங்களை இழுத்துவந்து, அதை மக்கள் ரசிக்கும்படி செய்வார். பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் கமல் தன்னை வருத்தி... கை, கால் முறிந்து போகுமளவு சிரத்தை யெடுத்து செய்வார். ரஜினி தன் ஸ்டைல்களை அதற்குள் புகுத்தி, எந்த சிரமமும் படாமல் செய்து பலத்த கைதட்டலைப் பெறுவார். இயக்குநர் சிகரத்தோடு பல நாடகங்களிலும், சினிமாக்களிலும் இணைந்து பணியாற்றிய ஸ்ரீகாந்த்தின் இடத்துக்காக அழைத்து வரப் பட்டவரே ரஜினி. அதனால்தான் அவர் பெயரே இன்னொரு காந்த் ஆனது என செய்திகள் கசிந்தன.
அந்த காலகட்டத்தில் பம்பாய் படவுலகில், தன் வித்தியாசமான குரலாலும், மாறுபட்ட ஸ்டைல்களாலும் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கி, பின்னர் கதாநாயகன் வேடங்களில் பிரகாசித்து... அதன்பின் அரசியலில் நுழைந்து எம்.பி.யாகி பின்னர் மத்திய அமைச்சர் ஆனவர் சத்ருகன் சின்ஹா. அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் நடித்த "ராம்பூர் கா லஷ்மண்' என்ற படம் வெள்ளிவிழா கண்டது. அந்தக் கதையின் உரிமையை வாங்கிவந்து தேவராஜ்மோக னை இயக்குநராக அறிமுகம் செய்து முத்துராமன், ஸ்ரீகாந்த், ஜெயசித்ரா ஆகியோர் நடிக்க, இளையராஜா இசையில் "ராமன் தம்பி லஷ்மண்' என்ற பெயரில் படத்தை ஆரம் பித்தேன். ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டது. மூவாயிரம் அடிகள் வளர்ந்த நிலையில் படத்தைப் பார்த்தேன்.. நடிகர் தேர்வில் தவறு செய்துவிட்ட தாக உணர்ந்தேன். மேலும், புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்வது, அப்போது என்னோடிருந்த யூனிட்டுக்கும் பிடிக்கவில்லை என்பதையும் புரிந்துகொண்டேன். ஆகவே அந்தப் படத்தை நிறுத்திவிட்டு, எனது யூனிட்டோடு படங்களைத் தொடர்ந்தேன். ஆனால் அந்த யூனிட் நீண்டநாட் கள் நிலைக்கவில்லை. அதனால் கிளாமர் கிருஷ்ண மூர்த்தி பெயரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்து, நான் இயக்குநராக ஆவன செய்யும் வேளையில்... ராமாநாயுடு அவர்கள் "மதுரகீதம்' என்ற படத்தின் மூலம் என்னை இயக்குநராக்கினார். இந்தப் படத்துக்கு தமிழக அரசின் நாலு விருதுகளைப் பெற்றேன். பல தயாரிப்பாளர்கள் படம்பண்ண என்னை அணுகினார்கள். நான் "மூன்று முடிச்சு' தயாரிப்பாளர் ஆர்.எம்.சுந்தரம் கம்பெனியை மட்டும் ஒப்புக்கொண்டேன். சிவகுமார், ஸ்ரீதேவி, சுமித்ரா, சுருளிராஜன், அசோகன், மனோரமா நடிக்க "மச்சானைப் பார்த்தீங்களா' படத்தை ஆரம் பித்தேன். மதுரகீதத்தில் நான் அறிமுகப்படுத்திய சந்திரபோஸையே இதிலும் இசையமைப்பாள ராகப் போட்டேன். இந்த ஆக்க வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போதுதான் ரஜினி படங்களைப் பார்த்தேன்.
ஏனோ... "இதோ தமிழ்நாட்டுக்கு ஒரு சத்ருகன் சின்ஹா கிடைத்துவிட்டார்' என என் மனது சொன்னது. அவர் "புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். நான் போனபோது செட்டுக்குள் ஒரு மூலையில் கையை மடக்கி தலைக்கு கீழே வைத்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அது நான் எதிர்பார்க்காத ஒன்று. அவருக்கு கதாபாத்திரம் மிகவும் பிடித் திருந்தது. ஆனால் அந்த வருடத்தில் பதினேழு நாட்கள்தான் ஃப்ரீயா இருந்துச்சு. "அதைக் குடுங்க நான் முடிச்சிடறேன்' என்றேன், சம்மதித்தார். சம்பளம் பதினேழாயிரத்து ஐநூறு ரூபாதான். விஜயகுமார், ரஜினி, ஸ்ரீப்ரியா, சுருளி என பத்திரிகையில் செய்தி வந்ததும் பரபரப்பானது படம். "மாங்குடி மைனர்' எனப் பெயரிட்டு, மொத்தப் படத்தையும் ஹைதராபாத்தில் முடிக்க ஏற்பாடுகளைச் செய்தேன்.
ஏதோ காரணத்தினால் ரஜினி அவர்கள் கொடுத்த முதல் எட்டு நாட்கள் என்னால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. அவர் தயங்கினார்... ஆனால் நான் பிடிவாதமாக மீதி ஒன்பது நாட்களில் அவர் சார்ந்த காட்சிகளை முடிப்பேன் என உறுதியளித்தேன். ஒப்புக்கொண் டார். ஷூட்டிங் நடக்கும்போது எனக்குப் போராட்டமாக இருக்கும். கதாநாயகன் விஜய குமார், ரஜினி வில்லன். ஒவ்வொரு ஷாட்டிலும் ரஜினி ஏதாவது புதுசா "ஜிமிக்ஸ்' பண்ணுவார். அந்த நேரத்தில் ஹீரோ அமைதியாக, டம்மியாகப் போய்விடக்கூடாது. அதற்காக நாயகனுக்கு நடிப்பில் அல்லது வசனத்தில் எதையாவது செய்யச் சொல்லிக்கொடுப்பேன். என்ன பண்ணினாலும், ரஜினியிடம் ஒரு ஸ்பார்க் இருந்தது. அது மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் வசனம் பேசும் வேகம், கை, கால்களின் அசைவுகள், பாடி லாங்குவேஜ், டிரெஸ் போடும் ஸ்டைல் எல்லாமே மற்ற நடிகர்களைவிட மாறுபட்டதாகத் தெரிந்தது. அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸ் வித்தியாசமாக இருந்தது. அவருடைய நடிப்பில் எங்கேயும், யாருடைய சாயலும் இருக்காது.
சினிமாவில் சிவாஜி ஸார்... "பராசக்தி'யில், சிம்மக்குரலோனின் கர்ஜனையும், சிந்திக்க வைத்த இயல்பான நடிப்பும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் ரஜினியின் வரவு, தமிழ்த் திரையுலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி யது. சிவாஜி வந்த பின்னால், புதிதாக நடிக்கவரு பவர்கள் அவர் பாணியை பின்பற்றினார்கள். வச ன ம் யார் பேசினாலும், சிவாஜி, சாயல் இருக்கும். 1952ல் தமிழ்த் திரையுலகில் சிவாஜி திருப்புமுனை யை ஏற்படுத்தினார். 1977க்குப் பின்னால் நடிக்க விரும்பி வருபவர்கள் ரஜினியை பின்பற்றினார்கள் என்பதை மறுக்க முடியாது. அதேபோல் ரஜினியின் அரசியல் விமர்சனங்கள் பல இடங்களில் பெரும் திருப்புமுனையாக அமைந்தன. தைரியமாக தன் அபிப்பிராயங்களைச் சொல்வதில் ரஜினி எப்போதும் பின்வாங்கியது கிடையாது.
அதேபோல் திராவிட இயக்கங்கள், கடவுள் மறுப்புக் கொள்கையை பிரச்சாரம் பண்ணிவந்தத னால், ஓரளவு கோவில்களில் கூட்டம் குறைந்தது. திருவிழாக்கள் பெரிய அளவில் நடப்பதில்லை. திரைப்படங் களில் ஆன்மிகம் சம்பந்தப் பட்ட காட்சிகள், பாடல் கள் கணிசமாகக் குறைந்து கொண்டே போனது. ஆரம்ப காலத்தில் சிவாஜி திருப்பதி கோவிலுக்குப் போய்வந்ததால், "திருப்பதி கணேசன்' என கிண்டல், கேலி பேசினார்கள் மக்கள். "ராணி லலிதாங்கி', "காத்தவராயன்' போன்ற படங்களில் ஆன்மிகவாதியாக நடிக்க எம்.ஜி.ஆர். மறுத்தார். அப்படியிருந்த தமிழ்நாட் டில் ரஜினி தைரியமாக ஆன்மிகம் பேசினார். திருத்தலங்களுக்குச் சென்றுவந்தார். அடிக்கடி இமயத்துக்கு ஆன்மிகப் பயணம் சென்றுவந்தார். "ராகவேந்திரா' வேடத்தில் சிறப்பாக நடித்து பக்தியை பரப்பினார். இமயத்திலிருந்து ஒரு பாபா வை கூட்டிவந்து தியானம், யோகா, ஆன்மிகம் பற்றி பேசவைத்தார். தைரியமாக "சிஸ்டம் சரியில்லை' என பேசினார். "மீண்டும் ஜெயலலிதா ஆட்சி தமிழகத் தில் வந்தால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது' என தைரியமாகச் சொன்னார். எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி விழாவில் "நான் அரசியலுக்கு வந்து மறுபடியும் தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னால் தரமுடியும்' என பிரகடனப்படுத்தினார். "அண்ணாமலை', "அருணாசலம்', "பாபா' போன்ற ஆன்மிகப் பிரச்சாரம் கலந்த படங்களில் நடித்தார்.
அவரது படங்கள் முதலில் ஜப்பான் நாட்டில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தன. ரஜினி தமிழில் மட்டும் நடித்த படங்கள், இந்தியாவி லுள்ள எல்லா மாநில மொழிகளிலும் மொழிமாற் றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடின. பின்னர் வெளிநாடுகளிலும் வெற்றிகரமாக ஓட ஆரம்பித் தன. தமிழ் படங்கள் பலநூறு கோடிகளைத் தாண்ட, உலக நாடுகளில் அதிக நாடுகளில் ரஜினி படங்களே முதல் திருப்புமுனையாக அமைந்தன.
அரசியல் கட்சி ஆரம்பிக்கும்வரை போய்... அதன்பின் தைரியமாக அதை கைவிட்டவரும் இவர்தான். தமிழகத்தில் மூப்பனார் தனிக்கட்சி ஆரம்பிக்க உந்துதலாக இருந்தவர் ரஜினி. அகில இந்திய கட்சிகளிலிருந்து அனைத்து மாநிலக் கட்சிகளும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், வந்தால் தங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்போடு காத்திருந்தன. ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஒரு தேர்தலுக்கு வாக்கு செலுத்திவிட்டு வெளியே வந்து, தான் எந்தக் கட்சிக்கு வாக்களித்தேன் என தைரியமாகச் சொல்லிவிட்டுப் போனவர் ரஜினி. ஒரு தேர்த லின்போது ஏதோ ஒரு கோபம் காரணமாக குறிப்பிட்ட ஒரு கட்சி போட்டி போட்ட ஆறு தொகுதிகளிலும் அவர்களைத் தோற்கடியுங்கள் என தன் ரசிகர்களுக்கு வெளிப்படையாக வேண்டுகோள் வைத்தார்.
என்ன வேண்டுகோள்...?
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்